மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுண்ஸ்வீக் தோட்டம் குயின்ஸ்லேன்ட் பிரிவில் 20 வீடுகளைக்கொண்ட மூன்றாம் இலக்க நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து, இன்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன், வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தையடுத்து, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விபத்தில், உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும் பெருமளவில் வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட பாடசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், மக்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மஸ்கெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த தீ விபத்து தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹற்றன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.