டுபாயில் இருந்து நாடு திரும்பியவுடன் வீட்டிலேயே  தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும், அதனை தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  தான் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக டுவிட் செய்துள்ளார். ஆனால் அவர், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பதாக வந்த செய்திகளை நிராகரித்துள்ளார்.

டுபாயில் இருந்து நாடு திரும்பியவுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனிமைப்படுத்தி கொள்வாரென தாங்கள் நம்புவதாக பொது சுகாதார பரிசோதகர்கள், கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு நாமல் ராஜபக்ஷ, தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்வதன் ஊடாக ஏனையோருக்கு முன்மாதிரியாக இருப்பாரென எதிர்ப்பார்ப்பதாக  பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு திரும்பியுள்ள நாமல் ராஜபக்ஷ, வீட்டிலேயே  தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும் தனது மனைவி மற்றும் குழந்தையின் நலனுக்காக நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, வெளிநாட்டிலிருந்து திரும்பியதும், வீடு சென்று விட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும், அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.