மட்டக்களப்பு- கல்லடி கடற்படை முகாமில் 5 கடற்படை வீரர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 812ஆக உயர்வடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமையவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 812 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 731 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதில் 73பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்கள், தொடர்ந்து சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து அவதானமாக செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.