சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோயால் வாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

 

சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் பெருகி வரும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உடலின் அனைத்து உறுப்புகளையும் சிறிது சிறிதாக பாதிக்க தொடங்கி அதனை செயலிழக்க செய்யும் தன்மையுடையதாகும். இதற்கு வாய் மட்டும் விதிவிலக்கல்ல.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அவை உலர்ந்த வாய், வாய் துர்நாற்றம், வாய் புண், ஈறுநோய், ஈறுகளில் ரத்தம் மற்றும் சீழ் வடிதல், பழுப்பு கட்டிகள், புண்கள் ஆறுவதில் தாமதம், பூஞ்சைகளால் ஏற்படும் நோய், பற்களில் ஆட்டம் போன்றவை. இதனால் பற்களை சிறிய வயதிலேயே இழக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் போது அவை வெள்ளை அணுக்களை செயலிழக்க செய்கிறது. அவைதான் உடலின் மிக முக்கியமான தற்காப்பு செல்களாகும்.

 


மேலும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது பற்கள் ஆடிய நிலையில் இருந்தாலும் அவற்றை அகற்றுவதை தவிர்ப்பது நலம். காரணம் Osteomyelitis எனப்படும் எலும்பை தாக்கும் நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இவை தாடை எலும்பை அரிக்கும் தன்மை கொண்டது.

ஆகவே ரத்தத்தில் சர்க்கரை அளவை மாதந்தோறும் பரிசோதித்து கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளுவது அவசியம். இருமுறை பற்களை துலக்குவதன் மூலமும் அதிக தண்ணீர் பருகுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். பற்களை எடுப்பதற்கு முன்னரும், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரும் சர்க்கரை அளவை பரிசோதிப்பது முக்கியம். குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். மூன்று மாதத்திற்கான அளவை காட்டும் (HBAIC) பரிசோதனை பயன்தரக்கூடியது.

இவ்வாறு அரோமா பல் மருத்துவமனை இயக்குனரும், தலைமை மருத்துவருமான பெயான்ஸோ சி.பி. டானியல் தெரிவித்தார்.