கோவை அருகே உள்ள பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் குளத்தில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது.
இன்று காலை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குளம் வழியாக சென்ற பொதுமக்கள் குளத்திற்குள் 3 ஐம்பொன் சிலைகளை பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.மேலும் சம்பவ இடத்துக்கு வருவாய் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சிலையை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
இது குறித்து அதிகாரிகள் 3 ஜம்பொன் சிலைகளை யாராவது மர்மநபர்கள் திருடி வந்து கோவில் குளத்தில் வீசி சென்றனரா? அல்லது கோவிலுக்கு சொந்தமான சிலைகளா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிகாலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குளத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேரூர் போலீசார் கூறியதாவது:-
தற்போது சிலைகளை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். பின்னர் சிலைகள் எவ்வளவு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதை அறிவதற்காக தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்படும். மேலும் இந்த சிலைகளை யாராவது மர்மநபர்கள் கோவிலில் இருந்து திருடி இங்கு வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் நிர்வாகத்தினரிடமும் இது கோவிலுக்கு சொந்தமான சிலைகளா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.