மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரையிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் முகநூலில் என்னோடு அறிமுகம் ஆனார். 6 மாதங்கள் எங்களுக்குள் தொடர்ந்த இந்த நட்பு காதலாகி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

நான் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவுடன் எனது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக எனது உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகமடைந்த நான் அந்த பெண்ணின் செல்போனை சோதனை செய்து பார்த்தேன். அப்போது அந்த பெண்ணுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த நான் அந்த பெண்ணை கண்டித்ததால் அவர், தனது தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றார்.

அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அப்பெண் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.

எனது வீட்டை விட்டுச் செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் சங்கிலி மற்றும் ரூ.70 ஆயிரத்தை அந்த பெண் எடுத்துச் சென்று விட்டார். முகநூல் மற்றும் டிக்டாக்கில் தனது பதிவுகளை பதிவிட்டு அதற்கு பதில் பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து அந்த பெண் ஏமாற்றி உள்ளார்.

தற்போது வரையில் 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. எனவே என்னை ஏமாற்றிச் சென்ற அந்த பெண்ணைக் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.