சென்னை அயனாவரம் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (வயது 35). இவரது கணவர் ராஜ்குமார் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் சரண்ராஜ் (16) என்ற மகனும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

நிர்மலா தனியார் கம்பெனியில் வேலை செய்து தனது இரு மகன்களையும் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் சரண்ராஜ் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த அயனாவரம் போலீஸ் விசாரணையில், சிறுவனின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அடுத்தடுத்து, 2 வருடத்திற்குள் முன்பு கணவர் மற்றும் மகனையும் இழந்த இளம்பெண் நிர்மலா கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. அதேபோல் சென்னை அயனாவரம் செட்டித் தெருவை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் நிதிஷ் (16). சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். நேற்று அதிகாலை வழக்கம்போல் 2-வது மாடியில் உள்ள பால்கனியில் அமர்ந்து படிக்க சென்றுள்ளார்.

அப்போது கால் தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்ததில், அலறினார். சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிதிஷ் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.