கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடும்கண்டம் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நிதி மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது போலீசார் அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இதுபற்றி விசாரிக்க நீதிபதி நாராயண குருப் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது விசாரணையை முடித்து 150 பக்கங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை கடந்த மாதம் அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முடிவில் இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.