‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.


2020-ம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மானசா வாரணாசி ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்றார். அவர் வருகிற டிசம்பர் மாதம் நடக்கஉள்ள 70-வது உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறார்.

‘மிஸ் இந்தியா’ போட்டியில் 2-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரை சேர்ந்த மன்யா சிங் பிடித்தார். இவரது தந்தை ஓம்பிரகாஷ் ஆட்டோ டிரைவர் ஆவார். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் 2-வது இடம் பிடித்தது குறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்யா சிங் பகிர்ந்துள்ளார்.

அதில் தனது குடும்ப புகைப்படத்தையும் போஸ்ட் செய்துள்ள அவர், ‘மிஸ் இந்தியா’ போட்டிக்கு செல்ல தான் கடந்துவந்த கடினமான பாதையை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்களது குடும்பம் வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டது. பலநாள் இரவு உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இருந்துள்ளேன். வெளியே செல்லும் நேரத்தில் வண்டிக்கு கூலி கொடுக்கக்கூட பணம் இல்லாமல் எத்தனையோ கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளேன்.

குடும்ப வறுமை காரணமாக பலமுறை பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறு வயது முதலே வேலைக்கு சென்றேன். மாலை நேரத்தில் ஓட்டல்களில் பாத்திரம் கழுவ செல்வேன். இரவில் கால் சென்டரில் வேலை பார்த்தேன்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு எனது தேவைகளை பூர்த்தி செய்துகொண்டேன். பட்டப்படிப்பு படித்த போது எனது தாயிடம் இருந்த மில்லிகிராம் அளவுள்ள தங்கத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து தேர்வு கட்டணம் கட்டினேன்.

அதன்மூலம் நான் டிகிரி படித்துமுடிக்க முடிந்தது. நான் படிப்பதற்கு எனது தாய் மிகவும் கஷ்டப்பட்டார். எனது வியர்வையும், ரத்த கண்ணீரும் என்னை சும்மா விடவில்லை. நான் பெரிய கனவுகள் கண்டேன். அதுவே எனக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.

கனவு யார் வேண்டுமானாலும் காணலாம். அதற்கான வெற்றி வாய்ப்புகளும் வரும். அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் நான் 2-வது இடம் பிடித்து வெற்றி பெற்றது எனது தாய்-தந்தை மற்றும் சகோதரரை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும். வாழ்வில் முன்னேற எனது வாழ்க்கையை ஒரு பாடமாக வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.