சார்ஜா அரசின் மனிதவளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் ஏற்கனவே அரசுத்துறை ஊழியர்கள் வாரந்தோறும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளில் இருந்து கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒவ்வொரு துறையின் தலைவர்களும் தங்களது தேவைக்கேற்ப முடிவுகளை அறிவிக்கலாம்.
குறிப்பாக அலுவலகங்களில் இருந்து கண்டிப்பாக வேலை செய்ய தேவைப்படுபவர்கள் தவிர மற்றவர்கள் வருகிற 14-ந் தேதி முதல் வீடுகளில் இருந்தே தங்களது வேலைகளை செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ரிமோட் முறையில் வேலை செய்ய இயலாது என்றால் ‘ஷிப்ட்’ முறையில் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். 2 ஊழியர்களுக்கு இடையே 2 மீட்டர் சமூக இடைவெளியானது கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் முக கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
சார்ஜா போலீஸ் துறையின் தலைமை அலுவலகத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பிசிஆர் பரிசோதனைகளை செய்து கொரோனா இல்லை என்ற சான்றினை வைத்திருக்க வேண்டும். இத்தகைய சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்துக்குள் செய்ததாக இருக்க வேண்டும். எனினும் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.