விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் சந்தனமகாலிங்கம் (வயது 37). சாத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர் தனது வீட்டின் முன்பு இருந்த மரத்தை வெட்டியபோது மின் கம்பியில் பட்டு அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளிகள் குணசேகரன், சந்திரசேகரன், ராஜா மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இந்தநிலையில் இரவில் சந்தனமகாலிங்கம் வீட்டில் இருந்து வெளியே கிளம்பினார். மாலையில் பிரச்சினை நடந்ததால் அவரது மனைவி சுதாவும் (30) அவருக்கு பின்னால் சென்றார்.

அப்போது சந்திரசேகரன், குணசேகரன், ராஜா, ஐயப்பன் ஆகிய 4 பேரும் அவரை பின்தொடர்ந்து சென்று அவருடன் தகராறு செய்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சுதா, தனது கணவர் வெட்டப்படுவதை தடுக்க முயன்ற போது 4 ேபரும் சேர்ந்து சுதாவை மிரட்டி, விரட்டி விட்டனர்.

இதில் படுகாயமடைந்த சந்தனமகாலிங்கம் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரை வெட்டிய 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர் இந்தநிலையில் ராஜாவை போலீசார் கைது செய்தனர். குணசேகரன் பேரையூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவி கண் முன்பு அரசு பஸ் கண்டக்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.