மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் வசிப்பர் வடநாட்டைச் சேர்ந்த தன்ராஜ். இவர் அதேபகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறார். மேலும், மொத்த நகை வியாபாரியாகவும் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.


இந்தநிலையில், நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகை வியாபாரி தன்ராஜின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) ஆகியோரை கொடூரமாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கொடூர தாக்குதலில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கொலையாளிகள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொள்ளை கும்பல் எடுத்துச்சென்றதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,கடலூர் மாவட்டம் எருகூர் அருகே வட மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ தங்க நகைகள், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  கொள்ளையர்கள் 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுன்டரில் கொள்ளையன் இந்தியில் பேசியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் மணிப்பால், மணிஷ், ரமேஷ் ஆகியோர் தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.