வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பொலிஸார் உட்பட 15 பேர், மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று, 319 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 360 பேரின் மாதிரிகளும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடித் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதில் மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கும் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று வவுனியா தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வருகை தந்தவர்களிடம் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அவ்வாறு மாதிரிகள் பெறப்பட்டவர்களில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் சுதுமலையைச் சேர்ந்தவர். மற்றவர் கண்டியைச் சேர்ந்தவர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.