உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட உள்ளார்.
ஹரித்துவார் மாவட்டத்தில்- தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி, ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார்.
மேலும் அவர், உத்தராகண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும் தாய் இல்லதரசியாகவும் உள்ளனர்.
இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்பட இருக்கிறார். இன்று ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம்மாநிலத்தின் கோடைகால தலைநகரான கெய்சனில் இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்ய இருக்கிறார்.
அரசின் பல்வேறு திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் ஷிருஷ்டி கோஸ்வாமி அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களின் பணிகளையும் மேற்பார்வையிட உள்ளார்.
இதேவேளை கோஸ்வாமி பதவியேற்புக்கு முன்பு உத்தராகண்ட் அரசாங்கத்தின் கீழ் உள்ள பல்வேறு துறைகளின் அதிகாரிகள், தங்களின் திட்டம் குறித்து தலா 5 நிமிடம் காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்க உள்ளனர். குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் பங்கேற்று வருவதற்காக கோஸ்வாமிக்கு, ஒருநாள் முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து அம்மாநில அரசாங்கம் கௌரவித்துள்ளது.
மேலும், இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால் அவர்களை ஊக்குவிக்கவும் மாநில அரசு இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.
மாநில முதலமைச்சராக பதவியேற்பது குறித்து மாணவி ஷ்ருஷ்டி கோஸ்வாமி கூறுகையில், “இதனை என்னால் நம்பவே முடியவில்லை. என்னால் இயன்றதை செய்வேன்.
மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது பணி இருக்கும்’ என குறிப்பிட்டார்.