கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் முதல் இரண்டு மாதங்களில், ஸ்கொட்லாந்தின் பராமரிப்பு இல்ல ஆய்வுகள் 90 சதவீதம் குறைவடைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கொவிட்-19 வைரஸ் பரவும் அச்சம் காரணமாக, பராமரிப்பு இல்ல ஆய்வாளர்கள் ஆரம்பத்தில் தங்கள் வருகையை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு இல்லங்கள் குறித்த புகார்களும் மார்ச் மாதத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளன என்று பராமரிப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் 1,142 பராமரிப்பு இல்லங்களில் மருத்துவமனையை விட அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். மேலும் இந்த துறையில் நெருக்கடி கையாளப்பட்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொற்றுநோய்களின் போது வீடுகளை கடுமையாக கண்காணித்து இருப்பதாகவும், தேவையான இடங்களில் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கேயார் இன்ஸ்பெக்டரேட் (Care Inspectorate ) ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் ஜாக்கி பெய்லி (Jackie Baillie), ‘பராமரிப்பு ஆய்வாளர் ஒரு படி பின்வாங்கி சோதனைகளை நிறுத்தி வைப்பது தவறு’ என கூறியுள்ளார்.