உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் கிர்வா போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம் 10 ரூபாய் தருவதாக கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு 23 வயது வாலிபர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று கேட்டபோது, வாலிபரும், அவரது குடும்பத்தினரும் இணைந்து சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக வாலிபரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கற்பழிப்பு சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. எனவே அங்கு அசம்பாவித செயல்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.