தூத்துக்குடி தெர்மல்நகர் அருகே உள்ள முத்துநகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 30) . இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அவரை, அவரது மனைவி முத்துமாலை என்ற அனுஷியா (27) வழியனுப்பி வைத்தார். அவர் சிறிது தூரம் நடந்து செல்வதை அனுஷியா பார்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. அருகில் இருந்த ஒரு மரக்கிளை ஒடிந்து மின்சார ஒயரில் விழுந்து உள்ளது. இதனால் அறுந்த மின்சார ஒயர் தேங்கி கிடந்த மழைநீரில் விழுந்து, தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அறியாத கருப்பசாமி அந்த தண்ணீரில் மிதித்து உள்ளார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக கருப்பசாமி பயங்கரமாக சத்தம் போட்டு உள்ளார்.
அப்போது, அங்கு நின்று கொண்டு இருந்த ஒருவர் கருப்பசாமியை காப்பாற்ற சென்றாராம். அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அனுஷியா வேகமாக வந்து கணவரை காப்பாற்ற முயன்று உள்ளார். ஆனால் அனுஷியா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அனுஷியா பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் கருப்பசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவனை காப்பாற்ற முயன்று மனைவி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அறிந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமியை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சையும் அளிக்குமாறு டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.