வவுனியா பட்டானிச்சூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எமது கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்பட்டது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அங்குள்ள 900 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4500 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளனர்.

பிரதேச செயலகத்தை சேர்ந்த எந்த அதிகாரியும் எமது மக்களை பார்வையிடவில்லை. அவர்களுக்கான தேவைகள் குறித்தும் ஆராயவில்லை. குழந்தைகளுக்கு பால் மா மற்றும் வயோதிபர்களுக்கான உணவு மருத்துவம் என்பன பெரும் பாதிப்பாக உள்ளது.

எனவே தனிமைப்படுத்தப்பட்ட மக்களை மனிதாபிமானத்தோடு நோக்குங்கள்.“ எனத் தெரிவித்துள்ளனர்.