இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம் அந்தந்த நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவிலும் இங்கிலாந்தில் இருந்து வந்த 29 பேருக்கு இந்த தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தில் நேற்று 4 பேருக்கு புதியவகை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தில் இருந்து ஆமதாபாத் திரும்பிய அவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அவர்களது சளி மாதிரிகளை சோதித்த புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், அவர்களுக்கு புதிய வகை தொற்று இருப்பதை உறுதி செய்து உள்ளது.
தற்போது அவர்கள் 4 பேரும் ஆமதாபாத்தில் உள்ள எஸ்.வி.பி. ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுடன் விமானத்தில் வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் தீவிர பரிசோதனை நடந்து வருகிறது.