தென்காசி மங்கம்மாள் சாலை விஸ்வகர்மா நகரை சேர்ந்த சண்முகம் மகன் சுடலைமுத்து (வயது 27). இவர் செங்கோட்டையில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது தகப்பனார் சண்முகம் மற்றும் தாயார் இருவரும் வாவா நகரம் ஊருக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தென்காசிக்கு வந்துகொண்டிருந்தனர். குத்துக்கல்வலசை விலக்கு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

 

இதன் பிறகு 3 நாட்கள் கழித்து சுடலைமுத்துவின் தாயாரின் கையில் அதிகமாக வேதனை இருந்ததால் சுடலைமுத்து தனது தகப்பனார், தாயார் ஆகியோரை அழைத்துக்கொண்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் சொர்ணலதா, சுடலைமுத்துவின் தாயாருக்கு மருந்துச்சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார். அப்போது டாக்டர் சொர்ணலதா, சுடலைமுத்துவின் தாயாரிடம் சத்தம்போட்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சுடலைமுத்து, டாக்டரிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். உடனே டாக்டர் சொர்ணலதா, அவரை அவதூறாக பேசி வெளியே அனுப்பிவிட்டு, யாருக்கே போன் செய்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு அடையாளம் காட்டக்கூடிய 4 பேர் அங்கு வந்து சுடலைமுத்து மற்றும் அவரது தகப்பனார் அவர்களுடன் இருந்த சுடலைமுத்துவின் மாமா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுவிட்டனர்.

இதுபற்றி சுடலைமுத்து தென்காசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் டாக்டர் சொர்ணலதா கொடுத்த புகாரின் பேரில், சுடலைமுத்து மற்றும் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.