ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்கிஷோர் பிரதான், பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது 64 வயதாகும் இவர், இந்த ஆண்டு செப்டம்பரில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதினார். அதில் நல்ல ரேங்க் பெற்ற ஜெய்கிஷோருக்கு, மாநில அரசின் வீர் சுரேந்திர சாய் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருக்கிறது. 60 வயது தாண்டிய ஒருவர், மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக அடியெடுத்து வைப்பது அதிசய சம்பவமாக கருதப்படுகிறது.

 


“நாட்டின் மருத்துவக் கல்வி வரலாற்றிலேயே இது ஓர் அரிய நிகழ்வாகும். இந்த வயதில் மருத்துவ கல்லூரியில் சேர்க்கை பெற்றதன் மூலம், ஜெய்கிஷோர் பிறருக்கு ஒரு முன்னுதாரணமாக ஆகியிருக்கிறார்” என்று வீர் சுரேந்திர சாய் பல்கலைக்கழக இயக்குனர் லலித் மெகர் தெரிவித்துள்ளார்.

ஜெய்கிஷோரின் மகள்களான இரட்டை சகோதரிகளில் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். அதுதான், முதிய வயதிலும் டாக்டராகி பிற உயிர்களை காக்க வேண்டும் என்ற உந்துதலை இவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவப் படிப்பை படித்து முடிக்கும்போது ஜெய்கிஷோருக்கு 70 வயதாகி இருக்கும். ஆனால் அதுபற்றி கவலைப்படாத இவர், “டாக்டராகி பணம் சம்பாதிப்பது எனது நோக்கமில்லை. உயிருடன் வாழும்வரை பிறருக்கு மருத்துவ சேவை புரியவே விரும்புகிறேன்” என்கிறார்.