தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்தவர் அபுசுந்தர் மியான். இவரது மனைவி பாத்திமா நஸ்ரின் (வயது 24). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. அபுசுந்தர் மியான், வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்து உள்ளார். இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக பாத்திமா நஸ்ரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் பாத்திமா நஸ்ரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இறந்த பாத்திமா நஸ்ரின் உறவினர்கள் மத்தியபாகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சாவில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.