மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் விவாதித்ததாக தெரிவித்தார்.

எனவே விவாதிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் இறுதி முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

இதேவேளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை காலி வலய கல்விக்குற்பட்ட பாடசாலைகளை மூட தென் மாகாண கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அத்தோடு அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2021 ஜனவரி 03 ஆம் திகதிவரை பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.