கொழும்பு- லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் பதிவாகியுள்ளது.

கொரோனாவினால் இலங்கையில் உயிரிழக்கும் இரண்டாவது மிக இளைய குழந்தை இதுவாகும்.

மேலும், இந்த குழந்தையின் உடலும் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த டிசம்பர் 8ஆம் திகதி, கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழந்தையின் உடல், பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டதையடுத்து, நாடளாவிய ரீதியாக இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், மீண்டும் இறந்த குழந்தையை தகனம் செய்திருப்பதானது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு எதிராக தற்போது பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் ஊடாக எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்தனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது