பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், "திருமண விவகாரங்களில் விவாகரத்து, ஜீவனாம்சம் வழங்குவதில் பாரபட்சம் நிலவுகிறது. எனவே, விவாகரத்து, ஜீவனாம்சம் வழங்குவதில் மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த இடம் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான பொதுவான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

 

அரசியல் சாசனத்தில் பொருத்தமான சட்டப்பிரிவுகள் இருந்தாலும் குடிமக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம், விவகாரத்து ஆகியவற்றில் பாகுபாடு இல்லாத பொதுவான சட்டத்தை வழங்குவதில் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு சமூகங்களில் உள்ள பெண்களுக்கு எதிரான பாரபட்சமான நடைமுறைகளை, அவர்களின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடாமல் அகற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.