பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை மலம் அள்ளச் செய்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுகுடல் பகுதியைச் சேர்ந்த 13 முதல் 15 வயது வரையிலான பட்டியலின சிறுவர்கள் மூன்று பேர், வெள்ளிக்கிழமை காலையில், இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த ஊரின் ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர், அந்த சிறுவர்களை அந்த பொட்டல் பகுதி முழுவதிலும் இருந்த மனித கழிவுகளை அகற்றும்படி வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஒரு சிறுவன் அழுது கொண்டே அந்த பகுதியை விட்டு ஓடிவிட, மீதமிருந்த இரண்டு சிறுவர்கள் அங்கிருந்த மனித கழிவுகளைச் சாக்குப் பையில் அப்புறப்படுத்தினர்.
தப்பி ஓடிய சிறுவன் அளித்த தகவலால் அங்கு வந்த ஊர் மக்கள், சிறுவர்கள் மலம் அள்ளிச் சென்ற காட்சியை படம் எடுத்தனர். இதற்குப் பிறகு, சிறுவர்களை மலம் அள்ளும்படி வற்புறுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் பிபிசி கேட்டபோது, “இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தெரியவரும்” என்று தெரிவித்தார்.