நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல். இவர் தற்போது அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் வின்சென்ட் (வயது 14). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
வின்சென்ட் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். மேலும், நோய்வாய்ப்பட்டதால் தனக்கு பாடம் புரியவில்லை என வேதனைப்பட்டு வந்துள்ளான். அவனை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற வின்சென்ட் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தான். அவனை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் வின்சென்ட் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.