பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சம்பூரணம் (வயது 30). இவர்களுக்கு ஷஸ்மிதா (10), அக்‌ஷய்(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ந்தேதி காலை குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த சம்பூரணத்திடம், அருகே வசிக்கும் ஸ்ரீரங்கன் மகன் ராஜா (19), கூப்பிட்டால் வர மாட்டியா? என கூறி, அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சம்பூரணத்திற்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ராஜா ‘ஸ்கிப்பிங்’ கயிற்றால் சம்பூரணத்தின் கழுத்தை நெரித்துள்ளார்.

அப்போது சம்பூரணத்தின் குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். இதையடுத்து ராஜா, அதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக அந்த குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

 

இதையடுத்து வாய் பேச முடியாமல், மயக்க நிலையில் இருந்த சம்பூரணத்தை, அவரது உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக சம்பூரணத்தின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சம்பூரணம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.