கம்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட 65 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியர் இடமாற்றம் பெற்று வேறொரு இடத்திற்கு செல்லவிருந்த நிலையில் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த விருந்துபசாரம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த வைத்தியருக்கு கடந்த 06 ஆம் திகதி கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கராபிடிய வைத்தியசாலையில் கல்வி பயிலும் மருத்துவ மாணவியான அவரது மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த வைத்தியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி குறித்த வைத்தியர் தனது மனைவியை இறுதியாக சந்தித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ பிரிவின் சிகிச்சை நடவடிக்கைகள் தற்காாலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.