மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மாங்கேணி பிரதேசத்தில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து தோப்பூர் பிரதேசத்திற்கு தொழில் நிமித்தம் இன்று முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் மாங்கேணி பிரதேசத்தில் முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாகரை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதியான காத்தான்குடி சாவியா வீதியை சேர்ந்த முஹம்மது கனீபா முஹம்மது இர்பான் (வயது – 31) என்பவர் உயிர் இழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி அப்துல் ரஹ்மான் லத்தீப் (வயது – 54) என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணமடைந்தவரின் சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக வாகரை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.