அமீரகத்தின் ராணுவ செயற்கைக்கோளான ‘பெல்கான் ஐ-2’ மொத்தம் சுமார் 1,190 கிலோ எடை கொண்டதாகும்.


அமீரக விண்வெளி ஏஜென்சியின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் உருவான ‘பெல்கான் ஐ-2’ என்ற செயற்கைகோள் அமெரிக்காவின் செயற்கைகோள் மற்றும் விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ், பிரான்ஸ் நாட்டின் தலெஸ் அலினியா விண்வெளி நிறுவனம் ஒத்துழைப்பில் தயாரானது. கடந்த ஆண்டில் ராணுவத்தின் முதல் செயற்கைகோளான ‘பெல்கான் ஐ-1’ விண்ணில் ஏவி தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டில் புதிய செயற்கைகோளானது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரஞ்சு கயானாவில், ஆரியன்ஸ்பேஸ் ராக்கெட் ஏவுதளத்தில் ரஷியா நாட்டின் ‘சோயுஸ் 2’ என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இடி, மின்னல் காரணமாக இறுதி நிமிடங்களில் ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று முன்தினம் ஏவப்படப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் அந்த ராக்கெட்டில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் ‘டேட்டா ரிசப்ஷன்’ எனப்படும் தகவலை பெறும் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததால், நேற்று முன்தினம் ஏவப்படாமல் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மீண்டும் நேற்று விண்ணில் ஏவப்படும் என ஆரியன்ஸ்பேஸ் விண்வெளி மையம் தகவல் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் எல்லாம் சரியாக இருந்தது. உடனே இந்த செயற்கைகோள் அமீரக நேரப்படி சரியாக காலை 5.33 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விண்ணில் ஏவப்பட்டு சரியாக 58 நிமிடம், 48 வினாடிகளில் ‘பெல்கான் ஐ-2’ செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் தனியாக விடுவித்தது. அதாவது அமீரக நேரப்படி நேற்று காலை 6.33 மணிக்கு இந்த ராக்கெட் தனியாக விடுவிக்கப்பட்டது. இந்த புதிய செயற்கைகோள் அமீரகத்தின் ராணுவ செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் அதிக தரம் கொண்ட படங்களை வழங்கும்.

அமீரக மேம்பட்ட தொழில் நுட்பத்துறையின் துணை மந்திரி சாரா அல் அமிரி தனது டுவிட்டர் பதிவில், “அமீரகத்தின் ராணுவ செயற்கைகோளான ‘பெல்கான் ஐ-2’ விண்ணில் ஏவப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திட்டப்பணியில் பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.