கரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “நாங்கள் கரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை அறிய எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து இது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். ஏனெனில், அப்போதுதான் எதிர்காலத்தில் கரோனா பரவலைத் தடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.
கரோனா பரவலின் ஆரம்பப் புள்ளி என்று கருதப்படும் வூஹானுக்கு சர்வதேச மருத்துவக் குழு விரைவில் அனுப்பப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ் அந்நாட்டைவிட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திய சேதம் மிகப்பெரியது. இதில் அமெரிக்காவில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் சந்தையில் கரோனா வைரஸ் உருவாகவில்லை. அது ஆய்வகங்களில் உருவானது என்று அமெரிக்க நாளேடுகள் செய்தி வெளியிட்டன. இதன் அடிப்படையில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சீன ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதுதான் கரோனா வைரஸ் என்றும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம், சீனாவுடன் கூட்டு சேர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது. ஆனால், கரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே நடந்து கொண்டதாக சீனா தொடர்ந்து விளக்கம் அளித்தது.
மேலும், எங்கள் நாட்டில் தோன்றுவதற்கு முன்னரே கரோனா வைரஸ் வேறு சில நாடுகளில் பரவியுள்ளது. ஆனால், நாங்கள்தான் அதனை முதலில் கண்டறிந்தோம் என்று சீனா சமீபத்தில் கூறியது.