வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரை நடக்கும் நிகழ்வு நீடித்தது. புயல் கரை கடந்தபோது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறி, அதிக கனமழையை தரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி நிவர் புயல், புதுச்சேரிக்கு வடமேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனால் கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் புயல் மேலும் வலுவிழந்து புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. சென்னையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணிகளும் நடைபெறுகின்றன. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்காக அரசு உதவி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சென்று தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.