ஒரே பாலினத்தவரின் திருமணங்களை சட்டப்படி அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.


டெல்லி ஐகோர்ட்டில் சம உரிமை ஆர்வலர்களான அபிஜித் அய்யர் மித்ரா, கோபி சங்கர், கிட்டி ததானி, ஊர்வசி ஆகிய 4 பேர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வக்கீல்கள் ராகவ் அவஸ்தி, முகேஷ் சர்மா ஆகியோர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் அவர்கள் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-

ஓரின சேர்க்கையானது, சுப்ரீம் கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது குற்றம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்து திருமண சட்டத்தின் விதிகளில் இன்னும் ஒரே பாலின திருமணங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த சட்டம் இரு பாலின மற்றும் ஓரின சேர்க்கை திருமணத்தை வேறுபடுத்திப்பார்க்கவில்லை. அது 2 இந்துகளுக்கும் இடையேயான திருமணத்தை நடத்த முடியும் என்று மிக தெளிவாக கூறுகிறது.

இந்த விஷயத்தில், இரு பாலின தம்பதியர்களை போன்று ஒரே பாலின தம்பதியருக்கு திருமண அங்கீகார உரிமை நீட்டிக்கப்படாவிட்டால், அது தன்னிச்சையற்ற அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

இந்த நிலையில் ஓரின சேர்க்கை தம்பதியரின் திருமண உரிமையை மறுப்பது, இந்தியா கையெழுத்திடும் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரானது.

எனவே ஒரே பாலின திருமணங்களை இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜீவ் சஹாய் என்ட்லா, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஏற்கனவே சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் தாங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ தங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு லெஸ்பியன் ஜோடி தாக்கல் செய்த வழக்கு, அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்ட ஒரே பாலின ஆண் ஜோடி, இந்தியாவில் தங்களது திருமணத்தை வெளிநாட்டு திருமண சட்டத்தின்கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மற்றொரு வழக்கு என 2 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கையும் அந்த இரு வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் முடிவு எடுத்தனர்.

இந்த 3 வழக்குகளும் வரும் ஜனவரி மாதம் 8-ந் தேதி ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், ஒரே பாலின திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் விஷயத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை 4 வாரங்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து தெரிவிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்