பெங்களூரு வித்யாரண்யபுராவில் வசிப்பவர் சுபத்ராபாய். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரூ.1 கோடி பரிசு விழுந்திருப்பதாக சுபத்ராபாயிடம் அந்த நபர் கூறினார். இதனை நம்பிய அவர், அந்த பணத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். ரூ.1 கோடியை பெற வேண்டும் என்றால், அதற்காக அரசுக்கு வரி செலுத்த வேண்டும், அதன்பிறகு தான் பரிசு தொகையை கொடுப்பார்கள் என்று சுபத்ராபாயிடம் மர்மநபர் கூறியுள்ளார். மேலும் தான் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.1 கோடி பரிசுக்காக, ரூ.9¼ லட்சம் வரி செலுத்த வேண்டும் என்று மர்மநபர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சுபத்ராபாய், மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.9¼ லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு, அந்த நபரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால், அவரை சுபத்ராபாயால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனால் தன்னை மர்மநபர் ஏமாற்றி பணத்தை வாங்கி கொண்டதை அவர் உணர்ந்தார்.
இதுகுறித்து வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சுபத்ராபாய் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.