சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பாரிவள்ளல் தெருவில் வசித்து வந்தவர் செல்வரத்தினம் (வயது 41). இலங்கையைச் சேர்ந்தவர். தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இவர் தனது மனைவி, 3 குழந்தைகளை விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளார்.


இவர் மட்டும் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி இருந்து டி.வி. சீரியலில் நடித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை 6.45 மணி அளவில் தனது வீட்டு அருகில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கையில் அரிவாளுடன் செல்வரத்தினம் பின்னால் பாய்ந்து வந்தார். அந்த மர்மநபர் செல்வரத்தினத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். செல்வரத்தினம் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதே இடத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.

கொலை வெறியாட்டம் போட்ட அந்த மர்மநபர் ஆட்டோவில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இந்த படுகொலை சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவுடன் இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில், தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத் போலீஸ் படையுடன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கள்ளக்காதல் பிரச்சனையால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. விருதுநகரைச் சேர்ந்த தனது நண்பர் விஜயகுமாரின் மனைவி டயானாவுடன் செல்வரத்தினம் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதை விஜயகுமார் பலமுறை கண்டித்துள்ளார். விஜயகுமாரின் மனைவி டயானா சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். அந்த நிறுவனத்துக்கு சென்று டயானாவை, செல்வரத்தினம் தனியாக புதுச்சேரிக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக சுற்றுவாராம். இந்த கள்ளக்காதல் பிரச்சனையை மையமாக வைத்துதான், செல்வரத்தினத்தை அவரது நண்பர் விஜயகுமாரே ஆட்டோவில் வந்து கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்று விட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

விஜயகுமாரை கைது செய்ய அசோக்நகர் உதவி போலீஸ் கமிஷனர் பிராங்லின் ரூபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளி விஜயகுமாரை நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் வைத்து கைது செய்தனர். அவர் சென்னை அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், செல்வரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அவர் வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும் இலங்கையை சேர்ந்தவன் தான். எனக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். விருதுநகர் அகதிகள் முகாமில்தான் நானும் வாழ்ந்தேன். எனது மனைவி டயானாவுக்கும், செல்வரத்தினத்துக்கும் தொடர்பு இருப்பதை நான் நேரில் பார்த்தேன். இதை கண்டித்தேன். தொடர்பை விட்டுவிடுவதாக செல்வரத்தினம் தெரிவித்தார். அதன் பிறகு அவர் டி.வி. சீரியலில் நடிக்க சென்னை வந்து விட்டார். ஆனால் ரகசியமாக எனது மனைவியிடம் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.

தீபாவளி அன்று எனது மனைவி அறந்தாங்கி செல்வதாக கூறிவிட்டு சென்றாள். ஆனால் அவள் சென்னைதான் வந்திருக்க வேண்டும் என்று நான் கருதினேன். சென்னையில் வைத்து, எனது மனைவியையும், செல்வரத்தினத்தையும் ஒன்றாக கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக ஒரு அரிவாள் வாங்கினேன். பஸ்சில் சென்னை புறப்பட்டு வந்தேன். கொலை நடந்த அன்று அதிகாலையிலேயே சென்னை எம்.ஜி.ஆர்.நகர் வந்து செல்வரத்தினம் தங்கி இருந்த வீட்டு அருகே அரிவாளுடன் காத்திருந்தேன்.

காலை 6.45 மணி அளவில் செல்வரத்தினம் தனியாக வீட்டை விட்டு வெளியில் வந்தார். அருகில் உள்ள டீக்கடைக்கு டீ சாப்பிட சென்றார். பின்னால் சென்று அவரை சரமாரியாக வெட்டினேன். அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விட்டார். அடுத்து அவரது வீட்டுக்கு சென்றேன். எனது மனைவி அங்கு இருப்பாள் அவளையும் போட்டு தள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது மனைவி அங்கு இல்லை. அவள் சென்னை வரவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

அந்த பகுதியில் தேங்கி கிடந்த மழைநீரில் அரிவாளில் படிந்திருந்த ரத்தக்கரையை கழுவினேன். பின்னர் ஆட்டோவில் தாம்பரம் வந்தேன். அங்கிருந்து பஸ் ஏறி விருதுநகர் வந்தேன். விருதுநகர் வந்து பஸ்சை விட்டு இறங்கியதும் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். நான் வைத்திருந்த அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் கூறினார்கள்.

கைது செய்யப்பட்ட விஜயகுமார் (வயது 40) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.