திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). விவசாயி. பழனி ரெயில்வே பீடர் ரோடு, அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (80). தியேட்டர் அதிபர். இவர்களுக்கிடையே பழனி பீடர் ரோட்டில் உள்ள 12½ சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

 


இந்தநிலையில் அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இளங்கோவன் ஈடுபட்டார். இதற்காக அவரது தரப்பினர், அந்த நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று காலை 10.15 மணி அளவில் ஈடுபட்டனர்.

இந்த பணியில் இளங்கோவனின் மகன் மதுபிரகாஷ் மற்றும் அவருடைய உறவினர்களும், விவசாயிகளுமான பழனி கவுண்டன்குளம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த பழனிசாமி (72), சத்திரப்பட்டி அருகே உள்ள ராமப்பட்டினம்புதூரை சேர்ந்த சுப்பிரமணி (57) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நடராஜன், தனது துப்பாக்கியை இடுப்பில் மறைத்து வைத்தபடி அங்கு சென்றார். பின்னர் அங்கிருந்த இளங்கோவனின் உறவினர்களிடம், இது தொடர்பாக கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சுப்பிரமணியையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சுட்டார்.

துப்பாக்கி சூட்டில் பழனிசாமிக்கு வலதுபுற தொடையிலும், சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் அகற்றினர்.

சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனனிக்காமல் உயிரிழந்தார்.

முன்னதாக பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தை கூறி நடராஜன் சரண் அடைந்தார். துப்பாக்கியையும் ஒப்படைத்தார். நடராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சுப்பிரமணி உயிரிழந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படுகாயம் அடைந்த சுப்பிரமணி உயிரிழந்ததையடுத்து பழனி நகர போலீசார் நடராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.