முழங்கால் வலி என்றாலே வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், தற்போது 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளைஞர்களிடமும் முழங்கால் வலி அதிகரித்து வருகிறது. நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, திடீரென கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவை இளம் வயதிலேயே முழங்கால் வலியை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பலர் வேலை மற்றும் படிப்பு காரணமாக நீண்ட நேரம் கணினி, மொபைல் உள்ளிட்ட திரைகளுக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றனர். இதனால் உடல் இயக்கம் குறைந்து, முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளின் வலிமையும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, படிக்கட்டுகளில் ஏறும்போது, குத்துக்காலிட்டு அமரும்போது, நீண்ட நேரம் அமர்ந்திருந்து எழும்போது முழங்காலில் வலி ஏற்படுவது இளம் வயதினரிடையே காணப்படுகிறது.

இதுகுறித்து எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜன் பாண்டியன் விளக்குகையில், இளம் வயதில் முழங்கால் வலி ஏற்படுவது அவசியம் மூட்டுவாதம் அல்லது மூட்டு தேய்மானத்தைக் குறிக்காது என்றும், வலிக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே முழங்கால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது

அலுவலக வேலை, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மொபைல் பயன்பாடு காரணமாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது தசைகளின் செயல்பாட்டைக் குறைக்கலாம். தொடை மற்றும் இடுப்புப் பகுதி தசைகள் வலுவிழக்கும்போது, முழங்காலின் இயக்கம் பாதிக்கப்பட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

2. முழங்கால் சில்லு வலி (Patellofemoral Pain Syndrome)

இளம் வயதினரிடம் பொதுவாகக் காணப்படும் முழங்கால் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. முழங்கால் சில்லுக்கு முன்னால் அல்லது அதன் பின்புறத்தில் வலி ஏற்படலாம். படிக்கட்டுகளில் ஏறும்போது, ஓடும்போது, குத்துக்காலிட்டு அமரும்போது வலி அதிகரிக்கலாம். தசை பலவீனம், தசைகளின் சமநிலையின்மை மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சி ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

3. திடீரென கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் திடீரென ஜிம்மில் கடுமையான பயிற்சிகள், ஓட்டப்பயிற்சி அல்லது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வது தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முறையான வார்ம்-அப் இல்லாமை மற்றும் தவறான உடற்பயிற்சி நுட்பங்களும் காயங்களுக்கு வழிவகுக்கலாம்.

4. விளையாட்டுக் காயங்கள்

கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் திடீரெனத் திரும்புதல், குதித்தல், வேகமாக ஓடுதல் மற்றும் திசை மாற்றுதல் போன்ற செயல்களின்போது முழங்கால் தசைநார்கள் அல்லது மெனிஸ்கஸ் பகுதியில் காயங்கள் ஏற்படலாம். இதுவும் இளம் வயதிலேயே முழங்கால் வலிக்குக் காரணமாக அமையலாம்.

5. உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிக்கும்போது முழங்கால் மூட்டுகள் தாங்க வேண்டிய சுமையும் அதிகரிக்கிறது. உடல் இயக்கமின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்து, ஏற்கெனவே முழங்கால் வலி உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை அதிகரிக்கலாம்.

எந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்?

முழங்கால் வலி தொடர்ந்து நீடித்தால் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக,

  • முழங்காலில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதல்

  • காலையில் எழுந்ததும் மூட்டுகளில் நீண்ட நேரம் இறுக்கம் காணப்படுதல்

  • முழங்கால் மாட்டிக்கொள்வது போன்ற உணர்வு

  • நடக்கும்போது முழங்கால் திடீரென வலுவிழத்தல்

  • பல வாரங்களாக வலி நீடித்தல்

  • காலில் உடல் எடையைத் தாங்குவதில் சிரமம் ஏற்படுதல்

போன்ற அறிகுறிகள் இருந்தால் எலும்பியல் மருத்துவரை அணுக வேண்டும். தேவைக்கேற்ப எக்ஸ்ரே, எம்ஆர்ஐ அல்லது இரத்தப் பரிசோதனைகள் மூலம் வலிக்கான காரணத்தை மருத்துவர் கண்டறியலாம்.

முழங்கால் வலியைத் தடுப்பது எப்படி?

1. நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டாம்: வேலை அல்லது படிப்புக்கு இடையே அவ்வப்போது எழுந்து நடக்கவும். கால்களை அசைத்து உடல் இயக்கத்தைத் தொடர்ந்து பராமரிக்கவும்.

2. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்: நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

3. தசைகளை வலுப்படுத்துங்கள்: தொடையின் முன்புறம், பின்புறம் மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் முழங்காலின் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவும்.

4. பயிற்சியின் தீவிரத்தைப் படிப்படியாக அதிகரியுங்கள்: திடீரென அதிக எடையுடன் உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான பயிற்சிகளைத் தொடங்குவதையோ தவிர்க்கவும். பயிற்சிக்கு முன் வார்ம்-அப் செய்வதும் அவசியம்.

5. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரியுங்கள்: சமச்சீரான உணவுகளை உட்கொண்டு, முறையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது முழங்காலில் ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

6. வலியை அலட்சியப்படுத்தாதீர்கள்: உடற்பயிற்சி செய்யும்போது வலி அதிகரித்தால் அந்தப் பயிற்சியை நிறுத்தி, தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

இளம் வயதிலேயே முழங்கால் வலி ஏற்படுவது வயது காரணமாக மட்டுமல்ல; வாழ்க்கை முறை, தசைகளின் வலிமை, உடற்பயிற்சி செய்யும் முறை மற்றும் காயங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படலாம். அன்றாட உடல் இயக்கத்தை அதிகரித்து, முழங்காலைத் தாங்கும் தசைகளை வலுப்படுத்தி, ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் முழங்கால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.