வீடுகளில் சப்பாத்தி, கோதுமை தோசை, புரோட்டா உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்க கோதுமை மாவு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலரும் ஒரே நேரத்தில் அதிகளவு கோதுமை மாவை வாங்கிச் சேமித்து வைப்பது வழக்கம்.

ஆனால், முறையாகச் சேமிக்காவிட்டால் கோதுமை மாவில் ஈரப்பதம் ஏற்பட்டு கட்டிகள் உருவாகுவதுடன், புழுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லையும் அதிகரிக்கலாம். இதனால் மாவு விரைவில் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும்.

இந்நிலையில், கோதுமை மாவை நீண்ட காலம் தரமாகப் பாதுகாக்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கவும்

கோதுமை மாவைக் கண்ணாடி ஜாடி அல்லது காற்றுப் புகாத பிளாஸ்டிக் கொள்கலனில் போட்டு, அதன் மூடியை இறுக்கமாக மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இது மாவு விரைவில் கெட்டுப்போவதைத் தடுக்க உதவும்.

2. ஸ்டீல் பாத்திரத்தைப் பயன்படுத்தவும்

கோதுமை மாவைச் சேமிப்பதற்கு ஸ்டீல் பாத்திரம் சிறந்த தேர்வாகும். மாவைக் கொட்டுவதற்கு முன்பு பாத்திரத்தை நன்றாகக் கழுவி, ஈரப்பதம் இல்லாமல் முழுமையாக உலர்த்த வேண்டும். முடிந்தால் சிறிது நேரம் வெயிலில் வைத்தும் உலர்த்தலாம்.

3. உப்பைக் கலந்து வைக்கவும்

கோதுமை மாவில் பூச்சிகள் வருவதைத் தடுக்க உப்பைப் பயன்படுத்தலாம். மாவைச் சேமிக்கும் பாத்திரத்தில் சுமார் 4 முதல் 5 ஸ்பூன் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். முதலில் பாதி மாவுடன் சிறிது உப்பைக் கலந்து, பின்னர் மீதமுள்ள மாவையும் சேர்த்து கலக்கலாம்.

4. பிரிஞ்சி இலையைப் பயன்படுத்தவும்

கோதுமை மாவைச் சேமித்து வைக்கும் பாத்திரத்தில் ஒன்று அல்லது சில பிரிஞ்சி இலைகளைப் போட்டு வைக்கலாம். அதன் வாசனை பூச்சிகள் மாவை அண்டுவதைத் தடுக்க உதவும்.

எனவே, கோதுமை மாவை நீண்ட காலம் பயன்படுத்த விரும்புபவர்கள் ஈரப்பதம் இல்லாத பாத்திரத்தில் முறையாகச் சேமிப்பதுடன், மேற்கண்ட வழிமுறைகளையும் பின்பற்றலாம்.C