பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் வந்துவிட்டாலே, “ஏதாவது ஸ்நாக்ஸ் வேண்டும்” என்று குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்த நேரத்தில் கடைகளில் வாங்கிக் கொடுப்பதைவிட, வீட்டிலேயே சுவையாகவும், சுத்தமாகவும் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

அந்த வகையில், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து, சுவையான மற்றும் மொறு மொறுப்பான வெங்காய போண்டாவை சுலபமாக எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 4

பச்சை மிளகாய் – 2

அரிசி மாவு – ¼ கப்

கடலை மாவு – ½ கப்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சுடச்சுட மொறு மொறு வெங்காய போண்டா – குழந்தைகளை குஷியாக்கும் எளிய ரெசிபி! | How To Make Crispy Onion Bonda At Home

செய்முறை

முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

இதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். வெங்காயத்தில் இருந்தே சிறிது தண்ணீர் வெளியேறும் என்பதால், இந்த நிலையில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

சுடச்சுட மொறு மொறு வெங்காய போண்டா – குழந்தைகளை குஷியாக்கும் எளிய ரெசிபி! | How To Make Crispy Onion Bonda At Home

பின்னர் அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

மாவு கெட்டியாக இருந்தால் மட்டும் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் தளர்வாக இல்லாமல், போண்டா பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும். 

சுடச்சுட மொறு மொறு வெங்காய போண்டா – குழந்தைகளை குஷியாக்கும் எளிய ரெசிபி! | How To Make Crispy Onion Bonda At Home

எண்ணெய் நன்றாக சூடானதும், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளுங்கள். உருண்டைகளை அதிகமாக அழுத்தி இறுக்கமாக பிடிக்காமல், லேசாக உருட்டி ஒவ்வொன்றாக சூடான எண்ணெயில் போடவும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து, போண்டாக்களை அவ்வப்போது திருப்பி விட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரையில்  பொரித்தெடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் மொறுமொறுப்பாக வெங்காய போண்டா தயார்.

மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் இந்த மொறுமொறுப்பான வெங்காய போண்டாவை பரிமாறினால், செமையான காம்பினேஷனாக இருக்கும்.