சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் எடுத்த, பிரயாக்ராஜ் 'மகா கும்பமேளா 2025' நிகழ்வின் அரிய இரவு நேரப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மக்கள் கூட்டங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் 'மகா கும்பமேளா 2025' நிகழ்வை, பூமியில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட மூச்சடைக்க வைக்கும் அரிய புகைப்படம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி 220 நாட்கள் விண்வெளிப் பயணத்தை முடித்து, 2025 ஏப்.19 அன்று பூமிக்குத் திரும்பிய நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் (Don Pettit) இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரயாக் மகா கும்பமேளா 2025-ன் என்னுடைய சிறந்த புகைப்படம் இது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் புனித நதிக்கரையில் நடைபெறும் இந்த மகா கும்பமேளா, உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று என்றும் அவர் விவரித்துள்ளார்.

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, பிரயாக்ராஜ் நகரைச் சுற்றிலும் உள்ள நிலப்பரப்பில் ஒளி வெள்ளம் பரவியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. சுற்றியுள்ள இருண்ட பகுதிகளுக்கு மத்தியில் மின் விளக்குகளால் ஒளிரும் சாலைகள், தற்காலிக கூடார நகரங்கள் மற்றும் விழாப் பகுதிகள் மின்னுகின்றன. இது அங்கு கூடிய மக்களின் பிரமாண்ட எண்ணிக்கையையும் பரப்பளவையும் கண்முன்னே காட்டுகிறது. கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி நதிகள் இணையும் 'திரிவேணி சங்கமத்தில்' இந்த மகா கும்பமேளா நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்காக இங்கு திரள்வது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2025 மகா கும்பமேளாவிற்காகப் பிரயாக்ராஜ் நகரமே விரிவான சாலை வசதிகள், தற்காலிக கூடாரங்கள், மின் விளக்குகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பிரமாண்ட தற்காலிக நகரமாக மாற்றப்பட்டது. பூமியில் இருந்து பார்க்கும்போது மகா கும்பமேளாவின் பிரமாண்டத்தை முழுமையாக உணர்வது கடினம். ஆனால், டான் பெட்டிட் எடுத்துள்ள இந்தப் புகைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையைத் தருகிறது.

விண்வெளி வீரர்களுக்குப் பொதுவாக பூமியானது ஒளிரும் நகரங்கள், கடற்கரைகள் மற்றும் வானிலை அமைப்புகளின் கூட்டமாகவே தெரியும். ஆனால், இந்தப் புகைப்படம் மனிதர்கள் தற்காலிகமாக ஒன்று கூடிய ஒரு நிகழ்வு, விண்வெளியின் சுற்றுப்பாதையில் இருந்து பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய ஒளிச்சுவடாக மாறியிருப்பதை அரிய காட்சியாகப் பதிவு செய்துள்ளது. நம்பிக்கை, பாரம்பரியம், கோடிக்கணக்கான மக்களின் சங்கமம் விண்ணிலிருந்தும் மின்னியதை இந்த புகைப்படம் துல்லியமாகக் காட்டுகிறது.