இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் எவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் சமூக பரவல் நாட்டில் உள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும், இந்த நேரத்தில் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறினார்.

ஆரம்பத்தில் மினுவாங்கொட கொத்தணியில் இருந்து ஏராளமான நோயாளிகள் கண்டறியப்பட்டனர். ஆனால் இப்போது எண்ணிக்கையில் குறைவு காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முடக்க கட்டுப்பாடுகள் இல்லாதபோது பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கண்டறியப்பட்டதால், அது ஏற்கனவே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டது என்றும் இதன் விளைவாக நாடு முழுவதும் ஏராளமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான நோயாளிகள் ஒரு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் சமூக பரவல் இல்லை என குறிப்பிட்டுள்ள சுதத் சமரவீர, இருப்பினும், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறினால், சமூக தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.