கொரோனா வைரஸைக் கண்டறிய 50,000 விரைவான அன்டிஜென் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

முன் அனுமதியின்றி ஒரு தனியார் நிறுவனத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட விரைவான அன்டிஜென் சோதனை கருவிகளை வாங்க அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது என மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்துள்ள அவர், எந்தவொரு தனியார்  நிறுவனத்திடமிருந்தும் எந்தவொரு விரைவான அன்டிஜென் சோதனை கருவிகளையும் அரசாங்கம் இதுவரை வாங்கவில்லை என்றும் கூறினார்.

ஊடக அறிக்கைகளின் படி, சுகாதார அமைச்சு புதன்கிழமை தென் கொரியாவிலிருந்து 200,000 அன்டிஜென் கிட்களை இறக்குமதி செய்துள்ளது, அதேநேரம் எதிர்வரும் வாரத்தில் மேலும் 800,000 கிட்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்றின் விலை 1,200 ரூபாய் எனவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், வெறும் 20 நிமிடங்களில் முடிவுகளை வழங்கும் ரேபிட் அன்டிஜென் கோவிட் -19 சோதனையின் பயன்பாடு விரைவில் நாட்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர நேற்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அன்டிஜென் சோதனைக் கருவிகளை வாங்குவதற்கு டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டதுடன் அதனை ஏற்றுக்கொள்வதற்கான காலம் இந்த மாதம் 2 ஆம் திகதி முடிவடைந்தது மற்றும் சுகாதார அமைச்சின் படி 30 டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டது.