கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பயணிகள் பேருந்து சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த தூர இடங்களுக்கான பேருந்துகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் நிறுத்தப்பட மாட்டாது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து குறுந்தூர பேருந்து சேவைகளும் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.
மேலும் சுகாதார பாதுகாப்பு முறைமையினை பின்பற்றி, இன்று முதல் அலுவலக தொடருந்து சேவைகள் இடம்பெறுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அந்த தொடருந்துகள் நிறுத்தப்படமாட்டாது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் வடக்கு மார்க்கத்தில், குருநாகல் தொடருந்து நிலையம், முத்தெட்டுகல உப தொடருந்து நிலையம், பிரதான மார்க்கத்தில் அமைந்துள்ள தெமட்டகொடை உப தொடருந்து நிலையம், களனி தொடருந்து நிலையம், வனவாசல உப தொடருந்து நிலையம், றாகமை தொடருந்து நிலையம் ஆகியனவற்றில் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாக்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள், பேரலந்த உப தொடருந்து நிலையம், ஜாஎல தொடருந்து நிலையம், நீர்கொழும்பு தொடருந்து நிலையம்,கட்டுவ உப தொடருந்து நிலையம் என்பனவற்றில் நிறுத்தப்பட மாட்டாது.
அதேநேரம் மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.