வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழ் திரை உலகம் 10 தேசிய விருதுகளை வென்றுள்ளது. தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் திரை கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த தனுசுக்கும் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர்.கலைவாணனுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாசுக்குச் சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்“ திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், “ப்ளூ” குறும்படத்திற்காக டி.எஸ்.ஹரிஹர சுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெருமை:
10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
