கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலவரத்தை மக்களிடம் அரசாங்கம் மறைக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “சமூகத்தில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆனால் அரசாங்கம், சமூக ரீதியாகப் பரவவில்லை என குறிப்பிடுகின்றது.
மேலும், கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இளைஞர், யுவதிகள் பெரும்பாலானோர் தொழிலை இழந்துள்ளனர்.
இவர்கள் உட்கொள்வதற்கு உணவு இல்லை, அவர்கள் தங்கி இருந்த விடுதிகளுக்குச் செலுத்தப் பணம் இல்லை, முதலாளிமார்கள் குறித்த விடுதியிலிருந்து யுவதி, இளைஞர்களை அகற்ற முயற்சிக்கிறார்கள்.
ஆகவே, இவைகளை எல்லாம் அரசாங்கம் கவனத்திற்கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.