ஆந்திர மாநிலம்- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைகோள்களை ஏந்தியவாறு, பி.எஸ்.எல்.வி.சி-49 ரொக்கெட்டை இன்று (சனிக்கிழமை) விண்ணில்  செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-01 இந்த ரொக்கெட்டில் அனுப்பப்படுகிறது. சின்தடிக் அபர்சர் ரேடோர்  ஊடாக புவியை அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுத்து கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் உதவும் என கூறப்படுகின்றது.

மேலும்,  லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைகோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தலா 4 செயற்கைகோள்களும் இந்த ரொக்கெட்டில் அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ரொக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் நேற்று  ஆரம்பமாகியது.

அந்தவகையில் இன்று பிற்பகல் 03.02 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி 49 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள்  தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.