புதிய இணைப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.
ஆழ்வார் பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பொன்னாடை போர்த்தி மரியாதை
ஸ்டாலினை சந்திக்கச் சென்ற முதலமைச்சர் விஜயை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆரத் தழுவி இன்முகத்தோடு வரவேற்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
இதன்போது, விஜய் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
இந்தக் கலந்துரையாடலின்போது, தமிழக அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
முதலாம் இணைப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மதியம் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மதியம் 2.30 மணியளவில் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
மூத்த அரசியல் கட்சித்தலைவர்களுடன் சந்திப்பு
இதன் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் மதியம் 3.30 மணியளவில் விஜய் சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து மூத்த அரசியல் கட்சித் தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் முதலமைச்சராக பதவியேற்று மக்களுக்கு வழங்கிய உரையில், தமிழ்நாடு அரசின் கஜானா காலியாகிவிட்டது. விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணியை தொடங்கவுள்ளேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு, அவர் வைத்த குற்றச்சாட்டுக் நீண்ட விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த பின்னணியில் குறித்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில்,மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
