சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தாய்வானுக்கு, 2.37 பில்லியன் டொலர்கள்  மதிப்பிலான இராணுவ ஏவுகணைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தாய்வான் ஜலசந்தி பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தாய்வான் நாட்டுக்கு 237 கோடி மதிப்பிலான ‘ஹார்ப்பூன்’ ரக ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். எனினும், அந்தப் பிராந்தியத்தின் இராணுவ சமநிலையை மாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான போயிங் கோ, லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன், ரேதியான் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அமெரிக்க இராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடன் தாய்வான் தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில், முன்னதாக இந்த மூன்று ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சீன அரசாங்கம் பல தொழில் கட்டுப்பாடுகளை விதித்தது. எனினும் இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர்.

எந்த நேரத்திலும் சீனா தாய்வான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிற நிலையில், இந்த ஆயுத கொள்வனவு இடம்பெறுகின்றது.

அத்துடன், சீனாவின் இந்த நெருக்கடிகளை மீறி தங்கள் ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்ள தாய்வான் தலைசிறந்த ஆயுதங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறது. எதிர்காலத்தில் சீனாவுக்கும் தாய்வானுக்கும் போர் மூண்டால் தங்களைத் தற்காத்துக்கொள்ள இந்த ஆயுதங்களை தாய்வான் பயன்படுத்த உள்ளது.