பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கர்து நகர் நோக்கி பயணிகள் பேருந்துச் சென்றது. இதன்போது பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இந்த பேருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தின் ரவுண்டோ நகரில் மலைப்பாங்கான வீதியில் சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பாறைகள் உருண்டு நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன்போது பாறை ஒன்றின் மீது மோதிய பேருந்து வீதியோரம் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர், 4 இராணுவ வீரர்கள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.